Vannathikkulam

என்னுரை

எனது எழுத்துலகத்தின் அரிச்சுவடியே இந் நூலில் பதிவாகியுள்ளது. எதிர்பாராமல் திடீரென நிகழ்ந்த விபத்தினால் பேச முடியாத சிறுவனைப் போன்று நானும், எனது வாழ்வில் நடந்த சம்பவங்களை வெற்றுத்தாள்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்தேன்.

அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த காலத்தில் எனது கல்விசார் பட்டம் அங்கீகரிக்கப்படாதமையால் வேலையும் கிடைக்க வில்லை.

புலம் பெயர்ந்த அங்கலாய்ப்பு அவலம் ஒருபுறம், பல வருடங்களாக பழகிய பல நண்பர்களை வன்முறைக்கு இழந்து விட்ட துயரம் ஒருபுறமாக மனஅமைதியற்றவாறு காலம் ஓடிக்கொண்டிருந்தது.

அத்தகைய காலத்தில் பரணில் கிடந்தன என் எழுத்துக்கள். அதில் ஒரு அங்கம் தான் “நடுக்காட்டில் பிரேத பரிசோதனை” உதயம் இதழிலும் பின்பு குமுதம், யாழ்மணத்திலும் பிரசுரமாகி, எனது வாழும் சுவடுகள் தொகுப்பிலும் இடம் பெற்றது.

இந்த நெடுங்கதையில் நிகழும் சம்பவங்கள் எண்பதிற்கும் எண்பத்தி மூன்றுக்கும் இடைப்பட்ட காலத்தில் நான் தரிசித்தவை.

இம் மூன்று வருட காலமும், இலங்கையின் வரலாற்றை எழுதுபவர்களுக்கு முக்கியமான காலமாகும்.

இந்தக்காலத்தில் தனித்தமிழ் பிரதேசமான வட பகுதியில் வளர்ந்து கண்டியில் உயர்கல்வி பெற்ற பின்னர் ஒரு எல்லைக் கிராமத்தில் சிங்களவர்கள் மத்தியில் வேலை செய்த போது, என்னைப் பாதித்த, நான் சாட்சியாகிய, நான் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் இதில் இடம் பெறுகின்றன.

இலங்கையில் எண்பத்திமூன்றில் நிகழ்ந்த யூலைக் கலவரம் தற்செயலானது அல்ல, அதே சமயம் ஒரு சிலரால் வழி நடத்தப்பட்டதும் அல்ல.

ரஷ்யாவிலும் பிரான்ஸிலும் புரட்சி தோன்றுவதற்கு முன்பு பல சம்பவங்கள் - அதற்கான அத்திவாரத்தை தோற்றுவித்தது போலவே, இலங்கையிலும் எண்பத்திமூன்று யூலைக் கலவரத்திற்கும் பல காரணிகள் விதையிட்டன. இனவிடுதலைப் போராட்டத்திற்கும் மூலகாரணங்கள் நிறைய உண்டு.

இலங்கையில் மூவின மக்களையும் பிரித்தாளும் தந்திரத்தில் அரசியல் வாதிகள் ஈடுபட்டிருந்த வேளையில் - அந்த மூவின மக்களுடன் வாழவேண்டிய - அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டிய தேவை எனக்கு இருந்தது. அந்த வாழ்வின் அனுபவங்களை பதிவு செய்து வைத்திருந்தேன்.

குடாநாட்டுக்கு வெளியே வாழத் தலைப்பட்ட போதுதான் - தமிழினம் தவிர்ந்த, ஏனைய இனமக்களும் எவ்வாறு அரசியல் வாதிகளினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. இன முரண்பாடுகளுக்கு அடிப்படையாக விளங்கியவற்றையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

காதல்-திருமணத்தில் முடிந்தால் தான் வெற்றி என்பதில்லை. காதல், இனம் - மதம் - மொழி - குலம் பார்த்து வருவதில்லை. அதனால் தான் அதற்கு கண்கள் இல்லை என்பர். தமிழ் - சிங்கள காதல் திருமணம் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் என சொல்ல முடியாது. ஆனால் அத்தகைய காதல் திருமணங்கள் - இனவாத வன் செயல்கள் தலை தூக்கிய காலப்பகுதிகளில் இரண்டு தரப்பினாலும் விமரிசிக்கப்படுவதை அவதானித்துள்ளேன். அதுவும் வாழ்வுப் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கும்.

நோக்கங்கள் வேறாக இருந்த போதிலும் வடக்கிலும், தெற்கிலும் இளைஞர்கள் கிளர்ச்சி செய்வதற்கும் வித்திட்டவர்கள் அரசியல்வாதிகள். சாதாரண மக்களிடமிருந்தே போராளிகள் தோன்றினர். அந்த மக்களிடமிருந்து கனவுகளும் தோன்றின. அந்த கனவுகளை அருகே இருந்து ரசிப்பவன் கலைஞனாகவோ, படைப்பாளியாகவோ இருக்கும் பட்சத்தில் அவற்றை தான் சார்ந்த துறையில் பதிவு செய்து விடுவான்.அத்தகையதொரு முயற்சியே இக்கதை.

இந்த நெடுங்கதையில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தும் நிஜம். அந்த நிஜம் - நான் புலம் பெயர்ந்தபின்பும் நிழலாக தொடர்ந்தவை. அந்த நிஜத்தினுள் - புகுத்தப்பட்டுள்ள காதல் - கேள்விகளை எழுப்பும். விடைகளைத்தேடும்.

அரசியல் சம்பவங்கள் இடம் பெற்றாலும் கூட இது ஒரு காதல் கதைதான். இரண்டு வௌ;வேறு இனங்களைச் சேர்ந்த ஜீவன்கள் இணையும் போது எதிர் நோக்கப்பட்ட சிக்கல்களின் முடிச்சுக்கள் அவிழ்ப்பதற்கு மார்க்கங்கள் தேடப்பட்டன. வாழ்க்கையும் ஒரு தேடல் தான்.
இதனை புத்தகமாக வெளியிடத் தூண்டியதுடன் பல ஆலோசனைகளை நல்கிய நண்பர் எஸ்.பொ அவர்களுக்கும், எனது தெளிவற்ற எழுத்துக்களை சிரமம் பாராது வாசித்து கணணியில் பதிவு செய்த மேகலா குணரட்னத்துக்கும்;, மேலும் அச்சுப்பிழைகளை திருத்திய நண்பர் டு .முருகபூபதிக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அன்புடன்

நடேசன்


Copyright 2001-2008 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.