Vannathikkulam

இங்கிலாந்தின் பண்ணைகள் செறிந்த கிராமப்புறங்களில் மிருக வைத்தியராகத் தொழில் புரிகையில் பெற்ற அனுபவங்களை எழுத்துருவில் வடித்து சமகால ஆங்கில இலக்கியப்பரப்பில் தனக்கெனத் தனியிடத்தைச் சுவீகரித்துள்ளார் ஜேம்ஸ் ஹெரியட். இலங்கைத்தீவில் பிறந்து, வளர்ந்து உயர்கல்வி பெற்றுத் தற்போது அவுஸ்திரேலியாவில் மிருகவைத்தியராகக் கடமை புரியும் நண்பர் நடேசனும் தான் பெற்ற அனுபவங்களை எழுத்து வடிவில் கொண்டு வருவதில் ஈடுபாடு காட்டிவருகிறார்.

ஏற்கனவே தனது அனுபவங்கள் சிலவற்றைத் தொகுத்து வெளியிட்டுள்ள நடேசன் இந்த முயற்சி ஊடாகப் புதியதோர் பரிமாணத்துள் புகுந்துள்ளார். ஆங்கிலத்தில் ‘ நொவெல்லா’ என வர்ணிக்கப்படும் குறுநாவல் என்ற வகையீட்டுக்குட்பட்ட இந்தப் படைப்பு சுயசரிதை வடிவிலான கதையாடல் போக்கினைக் கொண்டதாகும்.

ஆசிரியரே தமது முன்னுரையில் கூறியுள்ளபடி 1980-1983வரையிலான காலப்பகுதியைப் பின்னணியாகக் கொண்டு இந்நூல் விளங்குகின்றது.

யாழ்ப்பாணத்தில் பிறந்து கண்டியில் உயர்கல்வி பெற்ற நடேசன் அவ்விரு நகரங்களையும் இணைக்கின்ற யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடறுத்துச் செல்லும் மதவாச்சியில் தொழில் புரிந்த காலத்தின் பதிவுகளை ஒரு படைப்பாளிக்குரிய எழுத்துச் சுதந்திரத்தைப் பிரயோகித்துப் பொலிவ+ட்டி வாசகப் பெருமக்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

வடமாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிய தமிழ், சிங்கள பெரும்பான்மை மாகாணங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மதவாச்சி, பதவிய, வவுனியா ஆகிய இடங்களைப் பின்புலமாகக் கொண்டு நாவல் எழுதப்பட்டுள்ளது.

நூலின் அடிநாதம் ஒரு தமிழ் ஆடவனுக்கும் சிங்கள மங்கைக்கும் இடையில் மலரும் காதல் படிப்படியாக வளர்ச்சியடைந்து பதிவுத் திருமண உறவு நிலையை அடைவதாக அமைந்துள்ளது.

இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை மிக மோசமான நிலையை அடைந்த 1983 ஜூலை வன்முறை வெடிப்புக்கு முன்னோடியாக இரு சமூகங்கள் மத்தியில் ‘மோதல்’ அரசியல் வெடிப்புக்களையும் பிளவுகளையும் ஏற்படுத்திக் கொள்கின்ற காலகட்டத்தில் சூரியனும் சித்திராவும் மிக நெருக்கமாக உறவுப்பிணைப்பில் ஈடுபடுகின்றனர்.

அதேபோல் கதையில் வரும் தமிழ், சிங்களப் பாத்திரங்களும் தம்மிடையே சினேகமான அமைதியான உறவு கொண்டே வாழ்கின்றார்கள். வாழ விரும்புகின்றார்கள்.

சமகால அரசியல் சூழலில் ஆதிக்கம் செலுத்துகின்ற அரசியல் போக்குகளும் நெறிகளும் எத்திசையில் சென்றாலும் சாதாரண மக்களிடம் அவர்கள் எந்த இனமாக இருந்தாலும் சரி அடிப்படை மனிதநேயமும் உத்தம குணங்களுமே நிறைந்திருப்பதை நடேசன் நன்குணர்ந்திருப்பதுடன் நன்றாக உணர்த்தியுமுள்ளார்.

ஆயினும் வலிமை குன்றிய சாமானியர்களால் அசுர வலிமை மிகுந்த ஆதிக்க சக்திகள் கட்டவிழ்த்துவிடும் வெறுப்பு மிகுந்த அழிவுகளைத் தடுக்க முடியாது. தப்பியோடுவது தான் இயலும். அதையே தான் கதையின் நாயகனும் நாயகியும் இறுதியில் செய்கின்றனர்.

‘வென்றவன் சொல்வதெல்லாம் வேதம்’ என்ற கண்ணதாசன் வரிகளுக்கேற்ப தற்காலத் தமிழர் அரசியல் என்பது ஒரு வீரதீரப் பிரதாபத் தோற்றப்பாடு கொண்டதாகவே ஆதிக்க சக்திகளாலும் அவற்றை எதிரொலிக்கும் ஊடகங்களாலும் பிரதிபலிக்கப்படுகின்றது. இத்தகைய ‘களளப்பிரர்’ காலச் சூழ்நிலையில் சமகால நிகழ்வுகளைச் சரியான முறையில் பதிவு செய்ய இலக்கியம் தான் களமாக அமைகின்றது.

அரசியல் போக்கின் அதிகாரத்தினால் அப்பாவி மானுடர்கள் பொசுங்கியும் நசுங்கியும் போகின்றதை எடுத்துக் காட்டவோ அல்லது அளப்பரிய இடர் நடுவிலும் மனிதப் பண்புகளைத் தளராமல் காப்பாற்ற முயற்சிப்பதையே இன்றைய நிலையில் இலக்கியத்தினால் மாத்திரமே ப+ரணமாக வெளிச்சம் போட்டுக் காட்ட முடிகின்றது.

மிகமிகத் தேவையான அக்காரியத்தை நடேசன் இச்சிறு நூல் மூலம் கணிசமான அளவில் செய்து காட்டியுள்ளார். பிரச்சார நெடி மிகுந்த பாத்திரங்களை உலவவிடக்கூடிய வாய்ப்பினை கதையின் செல்நெறி ஏற்படுத்திக் கொடுத்தபோதிலும் அதனைத் தவிர்த்து மிக இயல்பான முறையில் மிகுந்த சொற்சிக்கனத்துடன் அதிகப் பிரசங்கித்தனத்தையும் அதிமேதாவித்தனத்தையும் ஒதுக்கிக் கதையாடல் செய்திருக்கிறார் நடேசன்.

பிரிந்து நிற்கும் சிங்கள, தமிழ் இனங்கள் மத்தியில் மென்மையான புரிந்துணர்வை ஊட்டக்கூடிய பண்புகள் இந்நாவலுக்குண்டு. இரண்டு உதாரணங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். நாவலின் தலைப்பான ‘வண்ணத்திக்குளம்’ பதவிய என்ற சிங்களக் கிராமத்தின் பண்டைய தமிழ்ப் பெயராகும். வடக்கில் நடந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் முன்னோடி வெளிப்பாடு தான் இந்த எழிலாhந்த கிராமம். பேரினவாத ஆதிக்கத்தின் சின்னமாகத் தமிழர் நினைவுகளில் இடம்பெற்றுள்ள இக்கிராமத்தைப் பின்புலமாக வைத்துச் சில கதை மாந்தர்களைச் சித்தரித்ததன் மூலம் அக்கிராமவாசிகளை ‘ஆக்கிரமிப்பாளர்’ போலல்லாது ‘மானுடர்கள்’ ஆகக் காட்டுகிறார் ஆசிரியர். இந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகையில் பகையுணர்வு குறையத்தான் செய்யும்.

அதேபோல் அரசியல் சுற்றுச் சூழலை மறந்து இயல்பான மனித உணர்வுகளால் உந்தப்பட்டு உறவு கொள்ளும் நெஞ்சங்கள் திருமண பந்தத்தில் சேருவதற்கு நாட்டு நிலைமையே தடையாக உள்ளது.

எந்தவொரு வலிதான நியாயமும் இல்லாமல் ‘பிரச்சினை’ தீவிரமடைந்ததால் சிங்களத்தியைக் கட்டிக் கொண்ட தமிழன் தமிழ்ப் பகுதிக்குச் செல்ல முடியாததும் தமிழனை மணந்த சிங்களப் பெண் சிங்களப் பகுதியில் வாழ முடியாததும் தான் நியாயங்களாகத் தெரிகின்றன. இது எவ்வளவு வேதனைக்குரிய விடயம். இறுதியில் இருவரும் தம் பிறந்த மண்ணில் வாழமுடியாது வெளிநாடு செல்வது சிக்கலின் கூர்மையை மனிதாபிமானப் பார்வையில் ஏற்படுத்துகின்றது.

இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடுவதால் நடேசன் ஒரு அரசியல் நாவலை எழுதியுள்ளார் என்றோ அரசியலை வலிந்து திணித்துள்ளார் என்றோ எவரும் எண்ணிவிடக் கூடாது.

அடிப்படையில் இது மென்மையான காதல் கதை, பழைய நினைவுகளை அசைபோடும் படைப்பு, மனிதநேய அனுபவங்கள் நிறைந்த தொகுப்பு.

பாண்டித்தியம் நிறைந்த அளவு கோல்களுடன் திறனாய்வு மேற்கொள்ளும் வித்தகர்கள் நடேசனது நாவலில் பல குறைகள் காணக்கூடும். நாவலுக்குரிய அடிப்படை இலக்கணம் உண்டா? என்று கேட்கக்கூடும். அதன் கருப்பொருளில் பல உள்நோக்கம் கற்பிக்கக்கூடும்.

ஆனால் அத்தகைய கருத்துக்களைக் கடந்து இதனை நோக்கும் போது இந்நூலில் காணப்படும் ‘உண்மைத்தன்மை’ தெளிவாகப் புலப்படும்.

பாரதி கூறிய ‘உள்ளத்தொளி வாக்கினில்’ வருவது போல் நடேசனது உண்மையான அனுபவங்களும் எண்ணங்களும் இந்த நாவலில் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது. இதுவே நாவலின் அடிப்படை வெற்றிக்குக் காரணமாகிறது.

பின் நவீனத்துவக் கோட்பாடுகளுக்கு அப்பால் ஒரு சத்தியமான மெய்பொருள் இதில் உண்டு. அந்த மெய்யொளி தரும் பிரகாசம் படிப்பவரை ஆட்கொள்கின்றது.

இலகுவான வார்த்தைப் பிரயோகமும் அமைதியான எழுத்தோட்டமும் நாவலை ஒரு வாசிப்புத்தன்மை மிக்கதாக உருவாக்கியுள்ளது.

முல்லையும் மருதமும் கொண்ட மண்ணில் நடந்த இக்கதையை வாசிக்கும் போது வண்ணத்திப்ப+ச்சிகளின் இறக்கைகள் போல் உங்கள் உணர்வலைகளும் சற்றுப் படபடத்தால் அதுவே ஆசிரியரின் வெற்றியாகும்.

நடேசனின் வண்ணத்திக்குளம் குறுநாவலுக்கு அரசியல் ஆய்வாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களால் எழுதப்பட்ட முன்னுரை.


Copyright 2001-2008 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.