தமிழர் மருத்துவ நிலையம்

bala_praba_01

எக்சோடஸ் 1984

நடேசன்
1984 சித்திரை மாதத்தில் நான் இந்தியாவுக்கு சென்றிருந்த காலத்தில் (ENLF)எனறொரு அரசியல் கூட்டணி அக்காலத்து ஆயுத இயக்கங்களான தமிழ் ஈழவிடுதலை இயக்கம்(TELO) ஈழப்புரட்சிகர முன்னணி (EROS)மற்றும் ஈழமக்கள் புரட்சிகரமுன்னணி(EPRLF) ஆகிய மூன்றிற்கும் இடையே உருவாகியிருந்தது. இந்தக்கூட்டணியின் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கருணாநிதியை சந்தித்து படமெடுத்துக்கொண்டனர். இந்தப் படம் தமிழக பத்திரிகைகள் யாவற்றிலும் பிரசுரமாகியிருந்தது.

இந்த நிகழ்வு அக்காலத்தில் பலருக்கும் மகிழ்வைக் கொடுத்தது. எனினும் இந்த நிகழ்வையிட்டு கவலை கொண்டவர்களையும் ஓன்று சேர்க்க உதவியது.
அத்துடன் இந்தக் கூட்டணியினர் அவ்வேளையில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் ஆதரவை இழந்தது என்றும் பல கதைகள் அக்காலத்தில் பேசப்பட்டது. எனக்கும் அந்தச்செய்தி காற்றுவாக்கில் எட்டியது.

இந்தக் கூட்டணி இந்திய உளவு (RAW) அமைப்பால் உருவாக்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் சொல்லப்பட்டது.

(ENLF) கூட்டணியில் அதன் தலைவர்களுக்கிடையே தனிப்பட்ட ரீதியாக ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவதற்கான சுமுகமான உறவும் இருந்தது. இந்த உறவிற்கு அக்காலத்தில் பத்மநாபாவே காரணம் என்பதை பிற்காலத்தில் தெரிந்து கொண்டேன்

இந்த இயக்கங்கள் கூட்டணியாக இருந்த போதிலும் அதிலிருந்தவர்களிடம் பரஸ்பரம் நம்பிக்கையும் தோழமையும் இந்தியாவிலோ இலங்கையிலோ இருந்ததாகத் தெரியவில்லை.சந்தேகம்தான் இவர்களைப் பற்றிய பொது நோயாக இருந்தது. அதற்கான மருத்துவம் அக்காலத்தில் எவரிடமும் இருக்கவில்லை. இயக்கங்களிற்கிடையே மட்டுமல்ல ஒவ்வொரு இயக்கத்துள்ளேயும் இருந்த இந்த நோயின் கூறுகளை நான் கண்டும் கேட்டும் இருந்தேன். அவைகள் பின்னால் வரும்.

இந்தக் கூட்டணியில் இருந்தவர்களுடன் காலம் தாழ்த்தி – அதாவது 84 ஆம் ஆண்டு இறுதியில் விடுதலைப்புலிகள் உறவு கொண்டார்கள். ‘நாபா சிறியையோ, பாலகுமாரையோ நான் நம்பி வரவில்லை. உன்னைத்தான் நம்பிவந்தேன்’ என பிரபாகரன் நாபாவைப் பார்த்து கூறிய வசனத்தை பிற்காலத்தில் பிரபாகரனே மறந்துவிட்டார்.அந்த வார்த்தைகள் அக்காலத்தில் எனக்கு ஈழ மக்கள் பரட்சிகர முன்னணியில் இருந்தவர்களால் பிரபாகரனின் நாவில் இருந்து வெளிவந்து காற்றில் கலக்கும்போது எனக்கும் சொல்லப்பட்டது.

விடுதலைப்புலிகளின் இணைவின் உள்நோக்கம் தமிழ் மக்கள் விடுதலை இயக்கம் என்ற புளட்டை இந்தக் கூட்டணிக்கு வெளியே வைத்து தனிமைப்படுத்துவதுதான் என்பது அக்காலத்தில் அரசியல் தெரியாதவர்களுக்கும் புரிந்திருந்தது. பதினைந்தாயிரம் இளைஞர்களை இந்தியாவில் வைத்து பயிற்சி கொடுத்த பெரிய இயக்கமாக புளட் இருந்தது. அந்த இயக்கத்தின் சிதைவு சோவியத் ரஷ்ஷியாவின் சிதைவுக்கு ஓப்பானது.
ஆங்கிலத்தில் Implosion என்ற வார்த்தைக்கு வரைவிலக்கணமாக உமா மகேஸ்வரன் தலைமை தாங்கிய இயக்கம் இருந்தது.

84ஆம் ஆண்டு இப்படியான விடுதலை இயக்கங்களுக்கு ஒரு பொதுவான மருத்துவ நிறுவனம் உருவாக்குவது பற்றி பலரால் சிந்திக்கப்பட்டாலும் அதற்கு ஆணிவேராக இருந்தவர் அக்கால ஈழ மக்கள் புரட்சிகர இயக்கத்தின் இராணுவப் பொறுப்பாளர் டக்ளஸ் தேவானந்தா.அந்த நிகழ்விற்கான முதல் கூட்டத்திற்கும் என்னையும் அவரே அழைத்திருந்தார். முதல் கூட்டத்தில் சமூகமளித்தவர்கள் சிலரின் பெயர்களை தற்போது மறந்தாலும் எல்லா இயக்கத்தினரும் அன்று அதில் சமூகமளித்திருந்தனர்.

விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளாக யோகியும் மற்றும் ஒருவருடன் வந்திருந்தார். அதேபோல் புளட் அமைப்பின் சார்பாக மட்டக்களப்பு வாசுதேவாவும் உண்ணாவிரதத்தால் உயிர் இழந்த திலீபனின் அண்ணன்; என பிற்காலத்தில் அறிமுகமானவரும் வந்திருந்தார். ரெலோ மற்றும் ஈரோஸின் சார்பில் தலா இருவர் சமூகமளித்திருந்தார்கள்.

இப்படியான மருத்துவ அமைப்பின் தேவையை எல்லோரும் உணர்ந்தாலும் அந்தக் கூட்டத்தில் அதிகம் பேசியவர்கள் வாசுதேவாவும் தேவானந்தாவுமே.
எந்த வார்த்தைகளும் பேசாமல் தலையை அசைத்தபடி இருந்தவர் யோகி என்பது இன்னமும் மனதில் பதிந்துள்ளது. அப்பொழுதே இவர்களுக்கு தலைவர் பிரபாகரனிடம் இருந்து திடமான கட்டளை பேசக்கூடாது என இருந்திருக்கவேண்டும். அமைதியாக அவதானித்து விட்டு வாருங்கள் என்பதாகவே இருக்கவேண்டும் என நான் நினைத்தேன்.

இந்த நிறுவனத்தின் தலைவராக விடுதலைப்புலிகளின் சார்பில் டொக்டர் ஜெயகுலராஜாவும் வாசுதேவாவால் உபதலைவராக டொக்டர் சாந்தி இராஜசுந்தரமும் காரியதரிசியாக மாஸ்டர் காசிவிஸ்வநாதர் தேவானந்தாவால் பிரேரிக்கப்பட்டனர்.

முதல் இருவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது புளட்டையும் ஈரோஸையும்; சேர்ந்தவர்களால் அவர்கள் இருவரும் டொக்டர்களாக இல்லை என எதிர்த்தபோது மிருகவைத்தியரான என்னை டக்ளஸ் தேவானந்தா காரியதரிசியாக்கினார்.

அப்பொழுது பொருளாளராக டொக்டர் சிவநாதன் தெரிவு செய்யப்பட்டார். இப்படியே இந்த இயக்கங்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ நிறுவனத்திற்கு தமிழர் நல மருத்துவ நிறுவனம் எனப் பெயரிட்டு மருத்துவரான எனது மனைவி அதில் டொக்டராக வேலை செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதில் என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இயக்கங்களிடயேயும் மக்களிடமும் அறியப்பட்டவர்கள். டொக்டர் ஜெயகுலராஜா விடுதலைப்புலிகளுக்கு வைத்தியம் செய்தமையால் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடையில் நடந்த தமிழ்க்கைதிகள் கொலைச்சம்பவத்தில் இருந்து உயிர்தப்பிய பின்பு மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பி வெளியேவந்தவர்.
டொக்டர் ஜெயகுலராஜா இந்தியாவுக்கு விடுதலைப்புலிகளால் கொண்டுசெல்லப்பட்டவர். அதேபோல் காந்திய நிறுவனத்தின் நிறுவனராக இருந்து 83ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் வைத்து கொலைசெய்யப்பட்ட டொக்டர் இராஜசுந்தரத்தின் மனைவியே டொக்டர் சாந்தி இராஜசுந்தரம்.
அவர் தமிழ்நாட்டு அரசின்கீழ் உள்ள எழும்பூர் பொலிஸ் மருத்துவமனையில் முழுநேர வைத்தியராக இருந்தார.

எமது பொருளாளராகிய டொக்டர் சிவநாதன் வாகரையில் வைத்தியராக இருந்தபோது அந்த வழியாக மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பியவர்களுக்கு உதவி புரிந்ததால் பாதுகாப்பு படையால் தேடப்பட்டு தமிழ்நாட்டுக்குத் தப்பிவந்தவர். டொக்டர் சிவநாதன் தமிழ்நாட்டுக்கு புளட் இயக்கத்தால் கொண்டு வரப்பட்டிருந்தார்.சிறிதுகாலம் தேனீயில் புளட் புதிதாக பயிற்சி முகாம் அமைத்தபோது அவர்களோடு இருந்தவர். இப்படி இவர்கள்; இயக்கங்களுக்கு அறிமுகமானாலும் பொதுவானவர்கள் என்ற கருத்தில் தமிழர் மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர்களாக அவர்கள் நியமிக்கப்பட்டதுடன் இந்த ஐந்து இயக்கங்களின் சார்பில் ஒவ்வொருவர் இயக்குநர்களாக இருப்பார்கள் என்ற நிலையில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் அரசு சட்டத்தின் கீழ், ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பாக பதிவு செய்யப்பட்டது.

ஒரு விதத்தில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் தமிழ் ஈழத்தின் சுகாதார நிறுவனம் என்ற எண்ணம் அக்காலத்தில் அதற்கு இருந்தது என்பதை என்னால் மறுக்க முடியாது.

இந்த நிறுவனத்திற்கு காரியதரிசியான நான் குடும்பத்துடன் கோடம்பாக்கத்தில் இருந்ததால் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அதற்கு அருகாமையில் இருப்பதற்காக சூளைமேட்டில் ஒரு சேட்டின் வட்டிக்கடையின் மேல்மாடி வாடகைக்கு எடுக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தை நடத்துவதற்கு எந்த இயக்கமும் பணம் கொடுப்பதற்கு தயாரில்லை. நாங்கள் எல்லோரும் பணம் வாங்காது தொண்டர்களாக வேலை செய்வதற்கு தயாரானாலும் சேட்டின் வீட்டிற்கு வாடகை கொடுத்தாகவேண்டும்.
அத்துடன் அலுவலகம் நடத்துவதற்கு சில அடிப்படை செலவுகளும் இருந்தன. இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இயங்கிய நாகப்படையில் இருந்து வந்த கருணாநிதி என்ற இளைஞன் சென்னை பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும் தங்குவதற்கு இடமில்லாமல் இருப்பதாகவும் தகவல் வந்தது. டொக்டர் சிவநாதனை தொடர்பு கொண்டு கேட்டதின் பிரகாரம் அவனை எங்கள் உதவியாளராக நியமித்தோம். குறைந்த பட்சம் அவன் தங்கியிருக்க வசதியும் செய்து கொடுத்து சாப்பாட்டுக்கும் சிறு தொகை கொடுக்க வேண்டும்.

யாரிடம் கடன் வாங்க முடியும் என சிந்தித்து வெளிநாடுகளில் வசித்த சில தெரிந்தவர்களுக்கு கோரிக்கை வைத்தோம். முக்கியமாக விடுதலை இயக்கங்கள் ஒன்றிணைந்து ஒரு மருத்துவ நிறுவனம் அமைத்தது பலருக்கும் விருப்பமான செய்தியாக இருக்குமென்ற நம்பிக்கை எமக்கு இருந்தது.

அந்தக்காலத்தில் அமெரிக்காவில் டொக்டராக இருக்கும் எனது மனைவியின் சகோதரர் அருள் ரஞ்சிதன் தமது தங்கை பெற்றோரைப் பார்ப்பதற்கு இந்தியா வந்தார். பலகாலமாக வவுனியாவில் இயங்கிய காந்தியத்திற்கு பண உதவி செய்யும் மனித நேயமுள்ள மனிதர் அவர் என்பது எனக்குத் தெரியும்.
பிற்காலத்தில் அமெரிக்காவில் விடுதலைப்புலிகளின் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவராகவும் அவர் இருந்தார்.

அவர் சென்னை வந்தபோது கோடம்பாக்கத்தில் எங்களுடன் தங்கினார். அவரை ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் அலுவலகத்திற்கு கூட்டிச் சென்று பத்மநாபா உட்பட பல முக்கியமானவர்களை அறிமுகப்படுத்தினேன்.

அங்கு சுவர்களில் தொங்கிய கார்ல்மார்க்ஸ், லெனின் , ஸ்ராலின் படங்களைப் பார்த்ததும் அவருக்கு அடிவயிற்றைப் புரட்டி இருக்க வேண்டும.; எனக்கு அப்போது அவரது உணர்வு புரியாவிட்டாலும் பின்பு அவரது செய்கையின் மூலம் புரிந்தது.

என்னையும் ஒரு கம்யூனிஸ்டாக அவர் கருதியிருக்கவேண்டும். ஏற்கனவே அவரது தங்கையை மணம் முடித்து இரண்டு பிள்ளைகளும் இருப்பதால் அமைதியாக அந்த இடத்தைவிட்டு நகரும்பொழுது ‘இவங்கள் கம்மியூனிசம் கதைக்கிறங்கள்.’ என்று மட்டும் சொல்லி விட்டு வெளியேவந்தார்.

அருள் ரஞ்சிதனும் தலைவர் டொக்டர் ஜெயகுலராஜாவும் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். அவர் எமது மருத்துவ நிறுவனத்தில் இருப்பதை அறிந்து 12 ஆயிரம் இந்திய ரூபாய்களை எமது நிறுவனத்துக்கு கொடுத்ததாகவும் அந்தப் பணத்தை ஜெயகுலராஜா என்னிடமும் சிவநாதனிடமும் தந்தார். அத்துடன்; பொதுவாழ்வில் நானும் மனைவியும் இருப்பதால் நூறு அமெரிக்க டொலர்கள் மாதமொருமுறை அவர் தங்கைக்கு அனுப்பியதால் நாம் இருவரும் பணமுடை இல்லாமல் மருத்துவப்பணிகளைத் தொடங்கினோம்.

இதேவேளையில் வெளிநாட்டிலும் பல தமிழர்கள் சிறிசிறிதாக பணம் அனுப்பத் தொடங்கினார்கள்.

மலேசியாவில் வாழ்ந்த இலங்கை வம்சாவளி தமிழர்கள் பலர் எதுவித கேள்விகளையும் எம்மிடம் கேட்காமல் அனுப்பியது எனது இதயத்தை நெகிழவைத்தது. இயக்கங்களுக்கு கொடுத்தவர்கள் பலரதும் நோக்கங்கள் வேறுபாடானது. சிங்களவரை பழிவாங்குதல் , தனி ஈழம், அதற்கும் அப்பால் தமிழ் வீரர்கள் என்ற ஒரு பழமையான நினைவுகள் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த மருத்துவ சேவைக்கு தந்தவர்களது நோக்கம் மிகவும் தூய்மையானது.

சேட்டின் மேல் மாடி வாடகைக்கும் கருணாநிதி என்ற மாணவனுக்கு மாதம் முன்னூறு ரூபா கொடுப்பதற்குமான சக்தியை எமக்குக்கொடுத்த அருள் ரஞ்சிதனுக்கு நன்றி கூறவேண்டும்.

எமது நிறுவனம் இயங்கும்போது ஆரம்பத்தில் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு இலவச மருத்துவ சேவை என்றே அந்தக் கிளினிக்கை நடத்தினோம்.
அதன் பின்பு எமது நிறுவனத்தை சுற்றியுள்ள சென்னை மக்களுக்கும் எமது சேவை விஸ்தரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்கள் தங்கி இருந்த முகாம்களுக்கு சிவநாதனும் நானும் சென்று மருந்துகள் விநியோகித்தோம்.அங்கிருந்தவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து மருத்துவத் தொண்டர்களாக சென்னையில் பயிற்சி கொடுத்தோம்.

முதல் முதலாக ஜெய்ப்பூரில் கால்கள் தயாரிப்பதற்கு இருபதுக்;கும் மேற்பட்டவர்களை ஜெய்ப்பூர் அனுப்பி பயிற்சிகொடுத்தோம்.

இயக்கங்களில் இருந்து போரில் காயப்பட்டு வருபவர்களுக்கு சென்னையில் வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு எமது நிறுவனம் உதவியது. இவ்வாறு எமது சேவைகள் அங்கு கூடிக்கொண்டு சென்றன.

இதனால் முகாம்களுக்குப் பொறுப்பாக பலரை நியமித்து மேலும் இலங்கையில் இருந்து வந்த வைத்தியர்களை அந்தப்பணிகளுக்கு உள்வாங்கினோம்.

இரண்டு வருடகாலத்தில் பன்னிரண்டாயிரம் ரூபாவில் பல இலட்சம் ரூபா நிதியை கொண்டு நடத்தும் நிறுவனமாக அதனை வளர்த்தோம்.
வெளிநாட்டில் வாழ்ந்த தமிழர்களுக்கு அக்காலத்தில் இயக்கங்களுடன் நேரடி தொடர்பிருக்கவில்லை. பலர் அவர்களுக்கான பணத்தை எங்களுக்கு அனுப்பி இயக்கங்களுக்கு கொடுக்கும்படி எழுதி இருந்தார்கள். பலருக்கு முகவரி தந்தது தமிழர் மருத்துவ நிறுவனம்.

அக்காலத்தில் இயக்கங்களில் இருந்தவர்களை அவற்றிலிருந்து விடுவிப்பதற்கு நானும் சிவநாதனும் உதவினேம். ஐரோப்பா செல்வதற்காக ஏஜென்டுகளால் சென்னை கொண்டு வரப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட சில பெண்கள் ஆண்களுக்கும் பல வழிகளில் அவர்கள் மேற்கொண்டு பயணம் செய்ய உதவினோம்.

விடுதலைப்புலிகளின் தலைவரைத் தவிர்ந்த மற்றையவர்களை எக்காலத்திலும் எம்மால் சந்திக்க முடிந்தது. இதனால் எம்மை இந்திய உளவுப்பிரிவு (RAW) தமிழ்நாட்டு இரகசியபொலிசார் (Q Branch)) மிகவும் நட்பாக வந்து விடயங்களை அறிந்து கொள்ளவிரும்புவார்கள்.

—-000—-

“தமிழர் மருத்துவ நிலையம்” மீது ஒரு மறுமொழி

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.