இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை

எக்சோடஸ் 1984
நடேசன்
Indira2

யாழ்ப்பணத்தில் திருக்குடும்ப கன்னியர் மடத்தினரது வைத்தியசாலையில் வேலை செய்து கொண்டிருந்தபொழுது அங்கேயே 1984 ஜுன் மாதம் 18 ஆம் திகதி எனது மகள் யாழ்ப்பாணத்தில் பிறந்ததும் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுந்தது.

தொடர்ச்சியாக குண்டுகள் யாழ்ப்பாணத்தில் வெடித்துக் கொண்டிருந்தது. வேலை செய்யும் வைத்தியசாலைக்கு அருகிலும் அக்காலத்தில் குருநகர் இராணுவ முகாம் இருந்தது. எனது ஆலோசனைப்படி அவளும் இந்தியா வரத்தயாரானாள்

இந்தக்காலத்தில் சென்னையில் எனக்கும் எதிர்காலம் விடையில்லாத வினாவாக நீடித்து இருந்தது. அடுத்து என்ன செய்வது…? ஒரு சமூகமே பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு வெளியேறி அகதியாக அலையும் வேளையில் எனது மனைவிக்கு இந்தியாவுக்கு வெளிக்கிடும் நேரத்தில் ஏற்கனவே சொல்லியபடி அங்கு மேல் படிப்பு படிப்பதற்கு விருப்பமில்லை. ஓஃபருடன் செய்த வேலைகள் எனக்கு முற்றாக திருப்தி தரவில்லை. குகன்(பொன்னம்மான்) மூலம் விடுதலைப்புலிகளிடம் இருந்து வந்த அழைப்பை நிராகரித்து விட்டேன் . இந்த நிலையில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியில்; இருந்த குணசேகரம் என்ற குண்சியை சந்தித்தேன். நாம் இருவரும் யாழ். இந்துக்கல்லூரியில் ஒரு வகுப்பு முன்-பின்னாக படித்தாலும் ஒன்றாக ஹொஸ்டலில் இருந்தவர்கள்.

சென்னையில் அக்கினி வெய்யில் அடித்தோய்ந்தாலும் இரும்படிக்கும் உலைபோல் இருந்த மாலைப்பொழுதில் சூளைமேட்டில் உள்ள பெட்டிக்கடை அருகே இருவரும் தேநீர் குடித்தபடி வில்ஸ் சிகரட் ஒன்றை நான் பற்றவைத்தபோது அவன் தனது பில்டர் இல்லாத சர்மினார் சிகரட்டை நுரையீரல் எங்கும் இழுத்து நிக்கொட்டின் மூளையில் ஏறியதும் தனது தாடியை தடவியபடி ‘ஏன் நீ எங்களோடு கும்பகோணம் வந்து தங்கக் கூடாது. இங்கு இருந்து என்ன செய்கிறாய்..? ’ என சிறுவர் பாடசாலை வாத்தியாரின் தொனியில் கண்டிப்பாக விசாரித்தான். அப்படி பேசுவதுதான் அவனது வழக்கம்.

‘நான் எதுவும் முடிவு செய்யவில்லை. மேலும் இந்த விடுதலைப் போராட்டம் பற்றிய தெளிவான அபிப்பிராயம் எனக்கில்லை. அதே நேரத்தில் மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன்.’ எனச் சொல்லிவிட்டு நான் யோசித்தபடியே கூர்மையான அவனது கண்களைப் பார்த்தேன்.

‘நீ சுதந்திரமாக இயங்கலாம்.எங்கள் இயக்கத்துக்கு ஆட்கள் தேவையில்லை. இயக்கத்தோடு சேரவேண்டியதும் இல்லை.’

அவனது கிண்டலை சட்டை செய்யாமல் ‘இன்னும் சிலநாட்களில் எனது குடும்பம் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறார்கள். அதன்பின்னர் அது பற்றி யோசிக்கிறேன்’ என்றேன்.

‘கும்பகோணத்திலிருக்கும் ஸ்ராலின் அண்ணையின் வீட்டில் நீ தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன். எதைப்பற்றியும் யோசிக்காதே’ என்றான்.

இயக்கத்தின் மத்திய குழுவிலும் நிதி விடயங்களுக்கும் பொறுப்பாக குண்சி இருந்தான். மேலும் மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவத்தில் முக்கிய பாத்திரமாகவும் அவன் இருந்தான் என்று கேள்வி. இரகசியமாக விடயங்களை வைத்திருப்பதிலும் மறைந்து திரிவதிலும் அதிசய அசாத்தியமான திறமை அவனிடம் இருந்து.

அக்காலத்தில் கும்பகோணத்திற்கு அருகே உள்ள சிவபுரத்தில் இவர்களின் பயிற்சி முகம் இருப்பதை அறிவேன். மற்ற இயக்கங்களினது பயிற்சி முகாம்கள் ஓரத்தநாடு – சேலம் – தேனி என தமிழ்நாட்டின் பல இடங்களில் சிதறி இருந்தன.

மனைவி பிள்ளைகளுடன் எனது மாமா மாமியார் விமானமூலம் கொழும்பு ஊடாக சென்னை வந்து இறங்கினர். அவர்களை நண்பன் பரந்தாமனின் வீட்டில் தங்க வைத்தேன் அந்த வீட்டிற்குத்தான் எல்லா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியிரும் வருவார்கள் அங்குதான் எனது மகள் வந்து இறங்கியபோது வரவேற்று உள்ளே அழைத்து சென்றார் பத்மநாபா.

இரண்டு கிழமையில் கும்பகோணம் சென்று ஸ்ராலின் அண்ணாவின் வீட்டில் தங்கினோம்.

இந்த ஸ்ராலின் வை. கோபாலசாமி போன்றவர்களோடு ஒன்றாக படித்த வழக்கறிஞர். திராவிடர் கட்சி ஆதரவாளராக இருந்தவர். பெரியாரின் மறைவின் பின்பு வீரமணி – ஆனைமுத்து என பிளவுகள் – சொத்துக்கள் – கொள்கைகள் என பிரிந்தபோது இயக்க கொள்கையுடன் மட்டும் நின்றதுடன் ஈழ மக்களிடமும் அவர்களின் விடுதலை மீது மிகவும் பற்றுக்கொண்ட மனிதர்தான் இந்த ஸ்ராலின், உயரமானவர். மீசை வைத்தவர் மலையாள நடிகர் மம்மூட்டி மெலிந்தால் எப்படி இருப்பாரே அப்படிப்பட்ட தோற்றத்தில் இருப்பார். ஈழமக்கள் முன்னணியின் ஒரு காவலனாக அவர் அங்கு இருந்தார். அவரது வீட்டிற்கு எந்த நேரத்திலும் ஆட்கள் வருவதும் அங்கு தொடர்ச்சியாக சமையல் நடப்பதும் அன்றாடக்காட்சிகள். அண்ணை என சொல்லிக்கொண்டு அவரோடு எப்பொழுதும் குறைந்தது இரண்டு பேராவது இருப்பார்கள்.

அவர்கள் வீட்டில் இருக்கும்போது எனது மாமியாருக்கும் எனக்கு பிரச்சினை உருவாகியது. எனது மகளை – தனது பேத்தியை நான் யாரோ ஒரு அந்நியர் வீட்டில் வைத்திருப்பதாகவும் குழந்தை பெற்ற தனது மகளை அங்கு வைத்து கவனிப்பதற்கு வசதிகளும் இல்லை என்றும் படுக்க கட்டில் இல்லை என்றும் என்மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியவாறு இருந்தார் மாமியார். அவரது நச்சரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தன.

கும்பகோணத்தில் நான் எதிர்பார்த்த விதமாக வேலை எதுவும் இல்லை. நான் இயக்கத்தின் பயிற்சி முகாமுக்குச் சென்று பார்த்தேன். கும்பகோணத்தில் புறமே அமைந்த பெரிய தோட்டத்தில் பயிற்சிமுகாம் அமைந்த இடம் காவேரியாற்றின் கரையில் அமைந்திருந்த அழகான பிரதேசம். நான் பார்த்த காலத்தில் மிகக்குறைந்த ஆயுதங்களை மட்டும் வைத்துக்கொண்டு பயிற்சி செய்தார்கள். அத்துடன் அங்கு தேகப்பயிற்சியும் நடந்தது. மோட்டார் குண்டுகள் செய்யும் கடைச்சல் பட்டறை ஒன்றையும் அங்கு பார்த்தேன். ஒரு நாள் பத்மநாபா முகாமுக்கு வந்தபோது ஒரு ஏ கே 47 தூக்கி எனது கையில் தந்தார். கையில் எடுத்துப் பார்த்துவிட்டு வைத்துவிட்டேன்.

எனக்கு ஆயுதங்கள் மீது எக்காலத்திலும் கவர்ச்சி இருந்தது இல்லை. எனது சிறிய வயதுப் பருவகாலத்தில் எங்கள் வீட்டில் ஒரு துப்பாக்கி இருந்து. அதை எக்காலத்திலும் தொடவேயில்லை. பிற்காலத்தில் மதவாச்சியில் வேலைபார்த்தபோது வேட்டைக்கு போனபோதும்கூட துப்பாக்கியைத் தொட்டதில்லை. செட்டிகுளம் பகுதியில் வேட்டைக்கு சென்றாலும் ஆயுதத்தை பாவிப்பது எனது நண்பர்களே.

ஆதிகாலத்தில் இருந்து தன்னம்பிக்கை இல்லாதவர்கள் ஏந்துவதுதான் ஆயுதம் என்பது எனது நினைப்பு. ஆனாலும் ஆயுதம் இல்லாத உலகம் இராது என்பதுதான் நிதர்சனம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பயிற்சி முகாமில் எனக்கு அதிர்ச்சி கொடுத்த விடயமும் அதேவேளை என்னைக் கவர்ந்த விடயம் ஒன்றும் இருந்தது. அக்காலத்தில் அங்கு இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்பது முக்கியமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதேவேளையில் அங்கு பயிற்சி எடுத்தவர்கள் பயிற்சி முடித்தபோது எழுதப் படிக்கத்தெரிந்தவர்களாக வெளியேறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. பெரும்பாலனவர்கள் யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் மலையகத்தையும் சேர்ந்தவர்கள் என்பதும் இதற்குக் காரணம்.

பயிற்சி முகாமில் உள்ளவர்களுக்கு ஒழுங்காக உணவு கொடுக்க முடியாதிருந்ததையும் அங்கு பார்த்தேன். பெரும்பாலான நாட்களில் அவித்த கொண்டல் கடலையை அல்லது பயறு வகையறாக்களை அவர்களது தட்டுகளில் கண்டேன். அரிசிச் சோறு மதியத்தில் பார்க்க முடியும். பல உறுப்பினர்கள் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உண்டியல் குலுக்கி காசுக்கு கையேந்துவதையும் அரிசி – பருப்பு என கடைக்காரர்களிடம் வாங்கியதையும் பார்த்தேன்.

நாட்டிற்கு விடுதலை வாங்கித்தரப்போகிறோம் என ஆயுதம் ஏந்திய ஏனைய இயக்கங்கள் இவ்வாறு மக்கள் மத்தியில் – அதுவும் தமிழக விவசாய மற்றும் கிராமத் தொழிலாளர் மத்தியில் பணம் திரட்டுவதற்கு இறங்கியிருக்கவில்லை. ஆனால் – இப்படியான சிந்தனைக்கு மாவோயிசம்- லெனினிசத்தில் ஊறிய இந்திய மாக்சிசதோழர்களுடன் தோழமை கொண்டிருந்த பத்மநாபாவால் மட்டுமே முடிந்தது என நினைக்கிறேன்.

எழுதப் படிக்கத் தெரியாத அந்த இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் – பல்கலைக்கழகங்களை அரைவாசியில் விட்டுவிட்டு வந்தவர்கள் என பலர் இருந்தார்கள். நாட்டின் விடுதலை என்ற பேரில் துன்பங்களை தாங்குவது மட்டுமல்ல – ஏழைகள் தொழிலாளர்களுடன் வாழ்வது எப்படி என்பதையும் பயிற்சியாக எடுத்து இயக்கத்தை ஒரு சமூக சீர்திருத்தமான இயக்கமாக பத்மநாபாவின் தலைமையில் சில காலங்களாவது ஈழமக்கள் புரட்சிகர முன்னணி இயங்கியதை அவதானித்து இலங்கையில் தமிழர் மத்தியில் மீண்டும் ஒரு நல்ல தலைமை வருமானால் அவர்களின் கீழ் மக்கள் அணிசேர்வதற்கான சாத்தியம் உண்டென்பதை மட்டும் என்னால் எதிர்வு கூற முடியும்.

ஒரு விவசாய நாடான இலங்கையில் மத்தியதர வர்க்கத்தினரையும் விவசாய தொழிலாளர்களையும் இனத்துவேச அரசியல் பேசாது ஒரேஅணியில் சேர்ப்பது என்பது மிகக் கடினம். ஆனால் அந்தக் கடினமான வேலை சில வருடங்களாவது பத்மநாபாவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தியத் தலையீடு, விடுதலைப்புலிகளின் மிலேச்சத்தனம் என்பன பத்மநாபா மட்டுமல்ல எவருமே எதிர்பார்க்க முடியாதது.

கும்பகோணத்தில் தனிவீடு எடுத்த பின்பு குடும்ப நிலைமை ஒரு அளவில் சீரடைந்தது. இந்தக் காலத்தில் எனது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி நண்பனாகிய கிருபாகரனை சந்தித்தேன். அவன் கிழக்கு மாகாணம் காரைதீவில் இருந்து வந்தவன். மிக வளமான உடற்கட்டுடன் எட்டாம் வகுப்பில் இருந்து இந்துக்கல்லூரியில் ஹொஸ்டலில் இருந்து படித்தவன். இருவரும் அங்கு நியூ போடிங் ஓல்ட் போடிங் இரு கட்டிடத்திலும் ஒன்றாக இருந்தோம். அவனை சந்தித்தபோது நம்பிக்கையுடன் பேசினான்.‘ ஈழம் வந்திடும். ரோ நமது தோழர்களுக்கு வட இந்தியாவில் பயிற்சி கொடுக்கிறது’ என்பான். அவனுக்கு அடிக்கடி குலாப் ஜாமுன் வாங்கிக் கொடுப்பேன். அவனுக்கு இனிப்பில் அளவுகடந்த ஆசை.

சில கிழமைகளில் உத்தரப்பிரதேசத்தில் பயிற்சி எடுத்தவர்களை சந்தித்தேன். அதில் ஒரு சுவையான விடயம் இங்கு குறிப்பிட வேண்டும். இலங்கைக் காட்டில் எப்படி கரந்துறைந்து, உயிர் வாழ்வது என்பதுபற்றி அவர்கள் சொல்லியிருந்தார்கள். இலங்கையில் கபரக்கொய்யா என்ற முதலை இனத்தைத் தவிர எல்லா இறைச்சியையும் சாப்பிட முடியும் என்று சொல்லியிருந்தார்கள். அந்தப் பயிற்சியை முடித்த இருவர் அங்கு நின்ற மெலிந்த கரும்பூனை ஒன்றை துரத்தியதைப் பார்த்தேன். இவர்களால் இலங்கை இராணுவத்திற்கு அபாயம் உண்டாகிறதோ இல்லையோ கோடம்பாக்கத்தில் நின்ற பூனைகளுக்கு ஆபத்து வந்ததுவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.

இக்காலத்தில் 1984 ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடந்த ஒரு சம்பவம் முக்கியமானது. மீனம்பாக்கத்தில் பனாகொடை மகேஸ்வரனால் கொழும்புக்கு அனுப்பவிருந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவம் இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அக்காலத்தில் சூரியா என்ற இந்திப்பத்திரிகையில் விபரமாக இந்தியா ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றி எழுதியிருந்தாலும் இந்தியா தொடர்ச்சியாக அதனை மறுத்தது. ஆனால் – இந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் குதிருக்குள் இருந்த திருடனை காட்டிக்கொடுத்தது.

கும்பகோணத்தில் இருந்த காலத்தில் பல முறை நான் சென்னை வந்து தங்குவேன். ஒரு நாள் 1984 நவம்பர் முதலாம் திகதி காலையில் எழுந்து காலை ஆகாரத்திற்கு வெளியே சென்றபோது பாண்டிபஜார் முற்றாக வெறிச்சோடியிருந்தது. பெரிய கடைகள் மட்டுமல்ல நடைபாதைக் கடைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன.

வழக்கமாக இடியப்பம் சாப்பிடும் மலையாளியின் கடை நொக்கி சென்றபோது அது மட்டுமல்ல அங்கு எந்த உணவுக்கடைகளும் திறக்கப்படவில்லை.மக்கள் நடமாட்டமற்றிருந்தது. சில நிமிடம் நடந்தபோது ஒரு மரத்தடியில் பிச்சைக்காரனைப்போல் தோற்றம்கொண்ட ஒருவரை சந்தித்தேன்.

அவர் – நேற்று இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதாக சொன்னார். வெளியே உணவுண்ணும் எனக்கு சென்னையில் பட்டினிதான் என நினைத்துக்கொண்டு நடந்து கோடம்பாக்கம் நோக்கி நடந்தபோது மேம்பாலத்தருகில் மூடப்பட்ட ஒரு சிறிய பெட்டிக்கடையில் ஆளரவம் தெரிந்தது. அந்தக் கடையின் கதவைத் தட்டினேன்.

” பந்… நடக்குது. போ சார்’ என ஒருவர் விரட்டினார்.

பசிக்கிறது என்றபோது நாலு பழங்களைத் தந்து ‘சீக்கிரம் வீடு போ சார்.’ என்றார்.

நான் நாடற்று வீடற்று திரிபவன் என அவருக்குச் சொல்ல முடியுமா?

பணம் கொடுத்தபோது வாங்க மறுத்தார்.

அப்படியே சூளைமேடுவந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் எபிக் என்ற இடத்தில் உணவு உண்டுவிட்டு அங்கிருந்தவர்களுடன் இந்திராகாந்தி யற்ற இந்தியாவையும் அவர் அற்ற ஈழவிடுதலையையும் அங்குள்ள தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.