இலங்கைக்குச்செல்பவர்களைத்தடுக்கும் நந்திகள்

நடேசன்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஐந்து பில்லியன் டொலர்கள் வியாபாரம் நடக்கிறது. 100 மில்லியன் டொலர்களை இந்திய கம்பனிகள் முதலீட்டியுள்ளன என்று இந்திய உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறினார். இந்த பொருளாதாரத்திற்கு அப்பால் நான் வியந்தது இந்த இரு நாடுகளுக்கும் இடையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையைக்கண்டுதான்.

இலங்கைக்குப் போகும் சந்தர்ப்பங்களில் சில தடவை புதுடெல்லி மற்றும் சென்னை வழியாக போகும் போது அந்த விமானத்தில் வரும் இந்தியர்களின் தொகையைக் கண்டு வியப்படைவேன். பலர் வியாபார நிமித்தமாக சென்றாலும் பெரும்பாலானவர்கள் உல்லாசப்பிரயாணிகள். நாடுகளை பயணத்தின் பலனாக அறிந்து கொள்வார்கள். குறிப்பாக அதற்குப் பாலம் அமைப்பவர்கள் ஊடகவியலாளர்களும் எழுத்தாளர்களும்தான்.

சமீபத்தில் கொழும்பில் ஒரு சிங்கள் நண்பரைச்சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற போது, அங்கு இந்திய ஆங்கில பத்திரிகைக்கும் இலங்கை பத்திரிகைக்கும் எழுதும் இந்திய தமிழ் ஊடகவியலாளரை சந்தித்தேன். ‘இப்பொழுதுதான் ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்து விட்டு வருகிறேன். அடுத்து தமிழ் தேசியகூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை பார்க்கப் போகிறேன்’ என்று அவர் சொன்னார். சென்னையில் அவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் அவரது இந்த சந்திப்புகள் தொடர்பாக ஆச்சரியப்பட்டேன். இவர்போன்ற பல ஊடகவியலாளர்கள் ஒரு செய்தியை எழுதும் முன்னர் பலரையும் சந்தித்துப்பேசிய பின்னர்தான் எழுதுவார்கள். இவர்கள்தான் இலங்கை அரசியலைப் பற்றியும் விரிவாக எழுதுகிறார்கள்.

இவ்வாறு பலரையும் சந்தித்து மக்களுக்கு தேவைப்படும் உண்மைகளை எழுதும் தமிழ் ஊடகவியலாளர்களைத் தேடுகிறேன்.

இருக்கிறார்களா?

முன்னர் சுமார் மூன்று வருடங்கள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இருந்து முக்கியமான அரசியல் பத்திரிகையாளர்களுடன் பேசியிருக்கிறேன். அதன் பின்பு பத்துத்தடவைக்கு மேல் இந்தியா சென்று திரும்பியிருந்தாலும் இந்தியாவைப்பற்றிய விடயங்களை எனது இந்திய நண்பர்களின் ஊடாகவே கேட்டுத்தெரிந்துகொள்வேன். அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்பேன். தமிழக விடயமாக இருந்தாலும் சரி டெல்லி விடயமாக இருந்தாலும் சரி அங்கிருப்பவர்களுடன் கலந்துரையாடியே ஒரு தீர்மாத்துக்கு வருவேன். சுமார் ஒன்றரை வருடங்கள் செங்கல்பட்டில் தலித் மக்கள் மத்தியில் வசித்திருந்தாலும் இந்திய சமூக கட்டமைப்பை எழுதுவதற்கு இன்னும் எனக்குத் துணிவு வரவில்லை. ஏனென்றால் நான் தெரிந்துகொள்ளவேண்டிய பல விடயங்கள் இருப்பதாகவே இப்பொழுதும் கருதுகின்றேன்.

குறைந்த பட்சம் ஒரு அயல்நாட்டை அல்லது அந்நிய நாட்டு விடயத்தை அறிந்து கொள்வதற்கு அந்த நாட்டுக்குச் செல்லவேண்டும். சாதாரண மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட அறிவுஜீவிகளுடன் கலந்துரையாடி பலதரப்பான விடயங்களையும் அறியவேண்டும்.
இலங்கைப் பிரச்சினையைப் பற்றி எழுதுபவர்கள் எத்தனை சிங்கள மக்களுடன் பேசி இருப்பார்கள்?

இலங்கையில் போர்முடிந்த பின்பு அவுஸ்திரேலியாவில் இருந்து பத்திரிகையாளர்கள்;, பாராளுமன்ற அங்கத்தவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டுமல்ல உளவு நிறுவனத்தினர் கூட பல மட்டங்களில் அங்கு போனார்கள். இவர்களில் பலரை நான் சந்தித்து இருக்கிறேன்.

இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் பற்றி மிகவும் தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்கள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்தார்கள். அவர்களுடன் 86 இல் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே தமிழ் மொழி, தமிழர் என்பதற்கு அப்பால் இலங்கை அரசியலை புரிந்து கொண்டவர்கள்.

இப்பொழுது இலங்கைத்தமிழர்கள் விடயத்தை அறிந்து கொள்ள எவருக்கும் தடையில்லை. அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என எவரும் வந்து போவதற்கு வசதியுள்ளது.

போர்முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. சமகாலத்தில் இந்தியாவில் இருந்து சோதிடம் சொல்பவர்கள், புடவை வியாபாரிகள், சாமியார்கள், இந்தித்திரையுலக நட்சத்திரங்கள், உல்லாசப்பயணிகள் மட்டுமல்ல தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுதவிர எத்தனை கள்ளக்கடத்தல்காரர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை சுங்க இலாகாவிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம்.

இப்படியான காலத்தில்தான் 2011 ஆரம்பத்தில் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்காக அதன் அமைப்பாளர், அவுஸ்திரேலியாவிலிருக்கும் எழுத்தாளர் முருகபூபதி தமிழக இலக்கிய வாதிகளை இலங்கைக்கு அழைத்தார்.

எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) யின் பூச்சாண்டி பேச்சுக்களினால் வர இருந்த சிலர் தொடை நடுங்கி விட்டார்கள். மேலும்பலர் அந்த மாநாட்டை எதிர்த்து அறிக்கைக்கு மேல் அறிக்கை எழுதி இணையத்தளங்களில் காகிதப்போர் தொடுத்து இறுதியில் மண்கவ்வினார்கள். சிலர் அந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டிற்காக இலங்கைக்குச் செல்லாமல்விடுத்து தமது செயலுக்கு அதனை ஒரு தமிழ் வீரமாக கருதி புறநானூறு படைத்தார்கள்.

எனினும் தமிழகத்திலிருந்து பிரபல எழுத்தாளர்கள் சின்னப்ப பாரதி, தோப்பில் முகமது மீரான் உட்பட பல சிற்றிதழ் ஆசிரியர்களுடன் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் இலங்கை வந்து அந்த மாநாட்டில் கலந்துகொண்டதுடன் இலங்கையில் பல இடங்களுக்கும் சென்று திரும்பினார்கள்.
எதிர்வரும் ஜூன் மாதம்; கொழும்பு தமிழ் சங்கம் தனது 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தவிருக்கும் இலக்கிய மாநாட்டுக்கு தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் அழைக்கப்பட்டிருந்தார்.
அவரும் செல்லத்தீர்மானித்திருந்தார். இந்தச்செய்தி வெளியானதுதான் தாமதம் உடனடியாக தமிழகத்தில் சிலர் மீண்டும் புறநானுறு படைக்கப்புறப்பட்டுவிட்டார்கள். விசமத்தனமான மின்னஞ்சல்களை அனுப்பி அவரது இலங்கைப்பயணத்தை தடுத்துள்ளார்கள்.

இப்படி அவருக்கு நடப்பது இதுதான் முதலாவது தடவை அல்ல.

2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் நான் வெளியிட்ட உதயம் இருமொழி (தமிழ்ஃஆங்கிலம்) பத்திரிகையின் 12 ஆவது நிறைவுவிழாவுக்கு அவரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்திருந்தேன். அப்பொழுதும் பலர் அவரை அவுஸ்திரேலியாவுக்கு நடேசனது அழைப்பில் போகவேண்டாம் என தடுத்தார்கள். அவர் வந்தால் அவரது வருகைமூலம் தமிழ்த்தேசியத்துக்கு துடக்கு வந்துவிடும் என கனவுகண்டார்கள். இங்கு அவரது நிகழ்வுகளை பகிஷ்கரிக்க ஆர்பாட்டம் செய்யவும் தயாரானார்கள். அந்த நிகழ்ச்சியில் அவுஸ்திரேலியாவின் பிரபல நாளிதழான the Age இன் இணை ஆசிரியர் ஜேம்ஸ் பட்டன் அவர்களும் பேச இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கான அனுமதிச்சீட்டுகளையும் பலருக்கு விநியோகித்திருந்தேன். எனினும் இந்த நிகழ்ச்சியை பின்னர் இரத்துச்செய்தேன். அந்த விவரம் தெரியாதவர்களுக்குப்பயந்தல்ல, என்னால் எனது நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு எந்தப்பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதனால்தான்.

எனினும் ஜெயமோகன் எனது அழைப்பை ஏற்று வருகைதந்தார். மெல்பனிலும் சிட்னியிலும் குறைந்த எண்ணிக்கையில் வருகைதந்தவர்கள் மத்தியில் ஜெயமோகன் சிறப்பாக உரையாற்றினார்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் மெல்பனில் நடந்த ஒன்பதாவது எழுத்தாளர் விழாவிலும் அவர் கலந்துகொண்டார். எனினும் அதில் அவரை பேசவிடாமல் ஊமையாக்கினார்கள்.
தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர், புத்திஜீவி ஜெயமோகன். ஆனால் நடேசன் அழைத்தால் அவர் போகக்கூடாது. இது என்ன வாதம்? இப்படிச்சொல்பவர்கள் எல்லாம் இலக்கியவாதிகளாம்!

குளத்தோடு கோவித்துக் கொண்டு தங்கள் பிருஷ்டத்தை கழுவாத இவர்களினால் யாருக்கு நட்டம்?

ஜெயமோகனை அவுஸ்திரேலியாவில் பகிஷ்கரிக்கவேண்டும் என்று கோஷம்போட்ட பல தமிழ்த்தேசியவாதிகள் ஏற்கனவே மட்டுமல்ல இன்றும் பலரை இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா அழைத்துவந்து தமிழ்தேசியம் பேச வைத்து கரகோசம்போட்டார்கள்.

ஆனால் என்ன பயன்? ஒன்றும் இல்லை.

ஆனால் அவுஸ்திரேலியா வந்த ஜெயமோகன் இந்தக்கண்டம் பற்றி எழுதிய ‘புல்வெளிதேசம்’ நூல் தமிழ் இலக்கியப்பரப்பில் அவுஸ்திரேலியாவை இனம் காட்டியது.

ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பற்றி அதிகம் எழுதிய ஒருவர் ஜெயமோகன். தமது நூல் ஒன்றில் மு.தளையசிங்கம், எஸ்.பொ, சிவத்தம்பி, சேரன், அ.முத்துலிங்கம், ஆகியோரைப்பற்றி விரிவாக எழுதியவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சிப்போக்கை தொடர்ந்து அவதானித்துவருபவர். அதேவேளை ஈழ அரசியலையும் அதிகம் தெரிந்து கொண்டிருப்பவர். மேலும் தெரிந்துகொள்ள விரும்புபவர். அப்படிப்பட்ட ஒரு தமிழகப்படைப்பாளி இலங்கை சென்றுவரவிரும்புவது இயல்பானதே.

இதனை எதிர்க்கும் மரமண்டைகள், ஒருவரது தனிப்பட்ட உரிமையை நிராகரிக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் மனித உரிமை பற்றி பேசுகிறார்கள். ஜெயமோகனுக்கு இலங்கையை பார்க்க விருப்பம் இருப்பது போன்று இலங்கையில் அவரது வாசகர்கள் பலருக்கு அவரைச்சந்தித்து உரையாட விருப்பம் இருப்பதும் இயல்பானதே. மற்றவர்களின் இந்த சாதாரண விருப்பத்தைக்கூட நிராகரிக்கும் கழிசடைகள் தொடர்ந்தும் இலங்கை குறித்து பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கின்றன.

ஜெயமோகன், பால்சக்காரியாபோன்று மலையாளத்திலோ அல்லது இந்தியிலோ எழுதுபவராக இருந்தால் இப்படியான அலுப்புகளில் இருந்து தப்பி இருப்பார்.

ஒரு நல்ல இலக்கியவாதி, பத்திரிகையாளன் உலகின் எந்தப்பாகத்திற்கும் சென்று மக்களை சந்தித்து புரிந்துகொள்ளவேண்டியவற்றை அறிந்து கொள்ளுவதன்மூலம்தான் வாசகர்களுக்கு பாலமாக இருப்பான். இதை இந்த நந்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் சோழர்காலம் பற்றி அறிந்து தமது நாவல்களில் எழுதுவதற்காக இலங்கை சென்று வந்த கல்கி, அகிலன், ஆகியோரும் தீபம் பார்த்தசாரதி, கு. அழகிரிசாமி, தொ.மு. பாஸ்கரத்தொண்டமான், மற்றும் இலங்கையிலிருந்து அகதிகளாகி தமிழ்நாடு மண்டபம் முகாமிலிருந்த ஈழத்தவர் பற்றி மாணிக்க கங்கை நாவல் எழுதுமுன்னர் இலங்கைவந்துசென்ற ராஜம் கிருஷ்ணன், பத்திரிகையாளர்கள் வாசந்தி, கோமல் சாமிநாதன், கஸ்தூரிரங்கன், பாரதிஇயல் ஆய்வாளர்கள் தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன், முனைவர் அரசு, அ. மார்க்ஸ், பா.ஜெயப்பிரகாசம், படைப்பிலக்கியவாதிகள் தோப்பில் முகம்மது மீரான், சின்னப்ப பாரதி உட்பட பலர் வந்துசென்றிருக்கிறார்கள்.

இந்த வரலாறு தெரியாமால் இலங்கையை புறக்கணிக்கவேண்டும் எனச்சொல்லும் இந்த நந்திகள் அதன் மூலம் எதனைச்சாதிக்கப்போகிறார்கள், இலங்கையில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கையில் எத்தனை போர் வந்தாலும், எத்தகைய அடக்குமுறைகளை அவர்கள் சந்தித்தாலும் எத்தனை அரசாங்கங்களை அவர்கள் எதிர்நோக்கினாலும் இலங்கைத்தமிழர்களின் கலை, இலக்கிய, பண்பாட்டுவேர்கள் தூர்ந்து  போய்விட மாட்டாது என்பதை இந்த குறுக்கே நிற்கும் நந்திகள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையில் பாரதிக்கும் கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் காலாதிகாலமாகத்தான் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இவர்கள் மூவரும் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் என்பதற்காக ஈழத்தமிழன் அவர்களை புறக்கணிக்கவில்லை. பாரதி நூற்றாண்டை தமிழகமே மறந்திருந்தபோது இலங்கையில் நாடளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டை கொண்டாடியவர்கள் ஈழத்தமிழர்கள். இன்றும் கொழும்பில் வருடாந்தம் கம்பனுக்கு விழா நடக்கிறது. வள்ளுவருக்கு வடக்கு, கிழக்கு மலையகம் மட்டுமல்ல தமிழ்க்குக்கிராமங்களிலும் விழா நடைபெறுகிறது. அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் தமிழ்தின விழாக்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஈழத்தமிழ் இலக்கியம் தொடர்ந்தும் சாதாரண தமிழ் மக்களிலிருந்து பல்கலைக்கழக மட்டம் வரையில் உயர்ந்து எழுச்சிபெற்றுக்கொண்டுதானிருக்கிறது.

அத்துடன் ஈழத்து தமிழ் இலக்கியவதிகளின் படைப்பு இலக்கிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மட்டுமன்றி தமிழகத்தின் பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சின்னப்பபாரதி உட்பட பலரது படைப்புகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சிங்கள வாசகர்களுக்கு சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த அரிய செயல்கள், தமிழகத்திலிருந்து வீறாப்பு பேசும் வாய்ச்சொல் வீரர்களான, இலங்கை செல்லவிரும்பும் தமிழக படைப்பாளிகளைத் தடுக்கும் அந்த நந்திகளுக்குத தெரியுமா?

தமிழர்கள் தமது விடுதலையை சிங்களவர்களிடம் இருந்து பெறுவதற்கு முன்பு இந்த முட்டாள்தனமும் சுயநலனும் பேசும் வக்கிரங்களிடம் இருந்து விடுதலை பெறவேண்டும்.
—0—

“இலங்கைக்குச்செல்பவர்களைத்தடுக்கும் நந்திகள்” அதற்கு 4 மறுமொழிகள்

  1. Ethanaiyo eluththalarkal Indiayavil irunthu pookum poluthu eean Jeyamohanukku THILLU illai?
    Eean NANTHIKALAI parthu jeyamohan payappidaveendum?

  2. எத்தனையோ எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் பொழுது ஏன் ஜெயமோகனுக்கு செல்லும் “தில்லு” இல்லை. சின்னப்பா பாரதிக்கும் தோப்பில் மிரானுக்கும் உள்ள துணிவு ஏன் ஜெயமோகனுக்கு இல்லை என எனக்கு விளங்க வில்லை. ஏன் நந்திகளை பார்த்து ஜெயமோகன் பயப்பிட வேண்டும்.

    அழமாக யோசிக்க 7 ம் அறிவு தேவை இல்லை. 5 அறிவே போதும்.

    என்னடா இந்தவாட்டி இந்தப் பிரச்சனை வரவில்லை எனப் பார்த்தேன்.

    அன்புடன்
    ஜீவகுமாரன்

    1. நான் பார்த்தவர்களில் உள்ளதை சொல்லும துணிவுள்ள எழுத்தாளர் ஜெயமோகன் ஆனால் நாளைக்கு ஜெயமோகன் எழுதும் திரைபடத்தை பகிஸகரி என கோசம் எழுப்ப கூடிய அறிவீலகள் மத்தியில் கடன் பட்டு படமெடுத்த ஒருவர் நட்டமாகிவிடக்ககூடாது என்ற நல்லண்ணம்தான் காரணம் என நினைக்கிறேனன் நான் கூட தில் இல்லாமல் 2009ல் உதயம் நிகழ்சியை இரத்து செய்யவில்லை . மற்வர்கள் பாதிக்க கூடாது என்பதுதான் . தில்லைவிட அறிவுதான் முக்கிமாகும

  3. நல்ல எழுத்தாளன்,
    அல்லது நல்ல வியாபாரி,
    அல்லது நல்ல எழுத்தாளன் com வியாபாரி
    இவற்றில் எந்த combination தனக்கு சூட் ஆகும் என ஜெயமோகன் அவர்களே முடிவு எடுப்பது நல்லது.

    அன்புடன்

    வி. ஜீவகுமாரன்

jeevakumaran -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.